முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தர்மபுரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,700 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.37.35 லட்சம் மதிப்பில் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2023-06-22 18:33 GMT

முதல்-அமைச்சர் கோப்பை

தர்மபுரி மாவட்ட அளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி வீர வீராங்கனைகளுக்கு பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற 1,700 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.37.35 லட்சம் மதிப்பீட்டில் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் முதன்முறையாக இந்த ஆண்டில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளாக 51 விளையாட்டு போட்டிகள் கடந்த 02.02.2023 முதல் 01.03.2023 வரை தர்மபுரி மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த போட்டிகளில் மொத்தம் 12043 வீரர்- வீராங்கனைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.3,000, இரண்டாமிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.2,000, மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகைகள் என மொத்தம் 1700 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.37.35 லட்சம் மதிப்பீட்டில் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது.

பதக்கங்கள்

மேலும் தர்மபுரி மாவட்ட அணியானது திருவண்ணாமலை மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி பிரிவு ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும், ஆண்கள் கடற்கரை கைப்பந்து போட்டியில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கமும் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மாவட்ட அளவிலான தனி நபர் போட்டிகளில் முதலிடம், குழு விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளும் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்