காவிரி விவகாரம் முற்றியதற்கு காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2023-08-24 05:53 GMT

கோவை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

ரஷியா அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவிய போதும், இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் - 3ஐ ஏவியுள்ளது. இதில் தமிழர்களின் பங்கும் உள்ளது. உலக நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை விட, மிகக் குறைவான பட்ஜெட்டில் சந்திரயான் -3ஐ அனுப்பியிருக்கிறோம்.

கவர்னரை பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் கவர்னரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் கவர்னரை நோக்கி பேசுகிறார்கள்.

கவர்னரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள். கவர்னரை எதிர்த்து கருப்புக் கொடி கட்டுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அந்த பொறுப்பில் இருப்பதற்கு சைலேந்திர பாபுவுக்கு தகுதி உள்ளதா என்று கவர்னர் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இதில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

காவிரி விவகாரத்தில் தற்போதைய பிரச்சினைக்கு காங்கிரசே காரணம். காவிரி விவகாரம் இந்த அளவு முற்றியதற்கு காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்த விவகாரத்தில் தீர்க்க வேண்டிய சிக்கலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடியாப்ப சிக்கலாக்கியுள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்