செப்.15 முதல் "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" செயல்படுத்தப்படும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-07 12:20 GMT

சென்னை,

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என அழைக்கப்படும். இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சித்தலைவர்களான உங்களின் பங்கு முக்கியமானது.

இந்த திட்டம் அண்ணாவின் பிறந்ததினமான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதகாலமே உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தின் பயன்களை பெற ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெற பொது விநியோக கடை மூலம் சிறப்பு முகாம்களை நடத்திட வேண்டும்.

விளிம்புநிலை மக்களான சாலை ஓரம் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்த திட்டத்தில் பயனடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்யவேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லை என்றாலும்கூட, அவற்றை பெறுவதற்கு உரிய வழிவகைசெய்து இந்த மகளிர் உதவித்தொகை அவர்களுக்கு கிடைப்பதற்கு உதவிபுரியவேண்டும்.

இந்த மகத்தான திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிரின் சமூக, பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படுமென நான் உறுதியாக நம்புகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற உன்னதமான திட்டத்தை எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக்காட்ட வேண்டுமென்று, அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையானது ஒரு கோடி பெண்களின் வாழ்க்கைக்கு உதவிசெய்யும் உயிர் தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்