முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Update: 2022-06-04 18:24 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது. சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, சி.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

20 ஆயிரம் பேருக்கு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கும் முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராமப்பகுதியில் உள்ள பயனாளிகளின் பட்டியல் விவரங்களை தனித்தனியாக தயார் செய்து கலெக்டரிடம் வழங்க வேண்டும்.

பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் மட்டுமே விழாவிற்கு அனுமதி வழங்கப்படும். மாற்றுத்தினாளி பயனாளிகளை முன்வரிசையில் அமர வைக்க வேண்டும்.

கண்காட்சி

விழா மேடை அருகில் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்காட்சி அமைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் மற்றும் விழா நடைபெறும் இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கிய பின்பு அனைத்து பயனாளிகளுக்கும் அங்கேயே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது முடிக்க வேண்டிய பணிகள், பிரதான நுழைவுவாயில் சாலைகள் போடுவது, அலுவலகம் முன்பு புல்வெளி அமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், செயற்பொறியாளர் சங்கரலிங்கம், ஜி.எம்.எஸ்.செந்தில்குமார், திட்ட இயக்குனர் எஸ்.பி.முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் டி.எம்.கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியா விக்டர், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் சி.எஸ். பெரியார்தாசன், மாவட்ட துணை அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கேசதீஷ் குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்