பழனி முருகன் கோவில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம்

பழனி முருகன் கோவில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Update: 2022-10-14 16:20 GMT

பழனி முருகன் கோவில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிலை பாதுகாப்பு குழு

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்டபங்கள் சீரமைத்தல், கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்தின்போது நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆன்மிகவாதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி, சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம், பழனி முருகன் கோவில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சிலையை பார்வையிட்டனர். அதன்பிறகு மீண்டும் கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

அறிக்கை சமர்ப்பிப்பு

கூட்ட முடிவில் குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பொங்கியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசு அமைத்துள்ள சிலை பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிலை பாதுகாப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆதீனங்கள், ஆகம வல்லுனர்கள், ஸ்தபதிகள், சித்த மருத்துவ அலுவலர் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்த கருத்துகள் அடங்கிய அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து அரசு எடுக்கும் முடிவை அடுத்து மூலவர் சிலைக்கு மருந்து சாத்துதல், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். மேலும் கடந்த காலங்களில் நடந்த கும்பாபிஷேக வழிமுறைகளை பின்பற்றியே தற்போதும் கும்பாபிஷேக பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்