மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக முதலுதவி சிகிச்சை மையம் 2-ந் தேதி திறப்பு -மேலசித்திரைவீதி கோவில் விடுதியில் அமைக்கும் பணி தீவிரம்

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக முதலுதவி சிகிச்சை மையம் 2-ந் தேதி திறக்கப்பட உள்ளது. மேலசித்திரைவீதி கோவில் விடுதியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

Update: 2022-11-29 19:49 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக நீண்டவரிசையில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது வரிசையில் நிற்கும் வயதானவர்கள், பெண்கள் ஆகியோரில் சிலருக்கு திடீரென்று மயக்கம் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சிலர் நெஞ்சுவலியால் கோவிலுக்குள்ளேயே இறந்து போகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே பக்தர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஆம்புலன்சு வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் முக்கியமான கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் தமிழக அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதலுதவி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அதற்காக டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுடன் முதலுதவி மையம் அமைப்பதற்கான நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் 2 டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் என 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து கோவிலுக்குள் முதலுதவி மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு நடந்தது. அதில் மேற்கு ஆடி வீதி பகுதியில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் அந்த மையம் அமைந்தால் அங்கு பாத்ரூம் வசதி போன்றவை அமைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே முதலுதவி மையத்தை கோவிலுக்கு வெளியே அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு சித்திரை வீதியில் கோவிலுக்கு சொந்தமான பிர்லா தங்கும் விடுதி உள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் உள்ளதால் முதலுதவி மையம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு முதலுதவி மையம் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அதில் முன்புறம் வரவேற்பு அறையும், அதைதொடர்ந்து முதல் அறையில் டாக்டர் சிகிச்சை அளிக்கும் அறையும், 2 அறையில் 3 படுக்கை வசதியுடன் முதலுதவி மையம் அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரிரு நாட்களில் முடிந்த உடன், வருகிற 2-ந் தேதி சிகிச்சை மையம் திறக்கப்பட உள்ளதாக கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்