குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரிப்பு

குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரிக்கப்பட்ட ரூ.80 ஆயிரம் வெடிகள் பறிமுதல் ெசய்யப்பட்டது.

Update: 2023-07-27 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சில இடங்களில் அரசின் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில் திருத்தங்கல் முத்துமாரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் ரகசியமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் முத்துமாரி நகரில் உள்ள அழகுராஜா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அழகுராஜா, மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதும், விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விதிமீறல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்