மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு விளைநிலத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விளைநிலத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தையொட்டி மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த மணிமுக்தா ஆற்றுக்கும், ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மணிமுக்தா ஓடைக்கும் இடையே விவசாய விளை நிலம் உள்ளது. இந்த விளை நிலங்களுக்கு ஓடையை கடந்து விவசாயிகள் சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை ஓடைப்பகுதியில் குறைவாக தண்ணீர் சென்றதால் அதே ஊரை சேர்ந்த விவசாயிகளான ராஜமாணிக்கம் (வயது 70), மகாலிங்கம் (48) மற்றும் வீரமுத்து (57), அவரது மனைவி கொளஞ்சி (51) ஆகியோர் ஓடை வழியாக தங்களது கால்நடைகளை ஓட்டிக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு விவசாய பணிகள் முடிந்ததும் மாலையில் வீடு திரும்ப புறப்பட்டனர். அப்போது மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓடையின் வழியாக விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
ஓடையில் தண்ணீர் அதிகளவு சென்றதால் விவசாயிகள் வீடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாப்பிட உணவின்றி இரவு முழுவதும் விளை நிலத்தில் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் தங்கி இருந்ததோடு, இதுபற்றி செல்போன் மூலம் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா ஆகியோர் தலைமையிலான வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி 3 மணி நேரம் போராடி மகாலிங்கம், ராஜமாணிக்கம், வீரமுத்து மற்றும் அவரது மனைவி கொளஞ்சி ஆகியோரை பத்திரமாக மீட்டனர். மேலும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லப்பட்ட 7 பசு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியும் மீட்கப்பட்டது.