பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் மீது வழக்குப்பதிவு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர், கேசவன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கரக்கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்துவந்தது. 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். நேற்று காலையும் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன.
மதியம் 3 மணி அளவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவருடைய மனைவி ஜெயசித்ரா (வயது 24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ெதாழிலாளர்கள் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தப்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் 13 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானது. ஏழாயிரம் பண்ணை மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் இன்றி பட்டாசு ஆலையை நடத்திய உரிமையாளர் கேசவன், போர்மென் முனியசாமி இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிமம் காலாவதியான நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்ந்து இயங்கி வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.