அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா

பூதாமூர் மற்றும் சாத்துக்குடல் பகுதி அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

Update: 2022-07-22 18:27 GMT

விருத்தாசலம்

பெரியநாயகி அம்பாள்

விருத்தாசலம் பூதாமூரில் முனீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் இரவில் சாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முனீஸ்வரர், பெரிய நாயகி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தீ குண்டத்தின் முன்பு எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி்னர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

திரவுபதி அம்மன்

விருத்தாசலம் சாத்துக் கூடல் சாலையில் ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதத்தில் உள்ள வேதவியாசர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, கர்ணன் மகுடாபிஷேகம், தர்மர் மகுடாபிஷேகம், அம்மன் பிறப்பு, அர்ஜூனன் வில் வளைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், சுபத்திரை திருக்கல்யாணம், அர்ஜுனன் தபசு, அம்மன் பூ எடுத்தல், கிருஷ்ணன் தூது, அரவான் கடவு பலி, வீர அபிமன்யு மோட்சம், கர்ணன் மோட்சம், கிரக வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால் தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தீ குண்டத்தின் முன்பு எழுந்தருள ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும், 29-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் விளக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்