ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆலங்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்துகொண்டு தீ விபத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மருத்துவர் பெரியசாமி கூறுகையில், கோடை காலங்களில் தீ விபத்து என்பது எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வாகும். இது மின்சாரம், எண்ணெய், வாயு மற்றும் மரப்பொருள்களால் ஏற்படுகிறது. இதையடுத்து பாதிப்பு ஏற்படா வண்ணமும், தற்காத்து கொள்வதற்கும் பணியில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணக்குமார் கூறுகையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. வீட்டில் உள்ள தீ பற்றக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்துதல், தரமான மின்சாதன பொருட்களை பயன்படுத்துதல், எரி வாயுவை பயன்படுத்தும்போது கதர் ஆடையை அணிதல், மின்சார கம்பிகளை தொடாமல் மரங்களை வளர்த்தல் போன்றவற்றால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கலாம் என்றார். இதில் மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.