பெட்ரோல் பங்க் குடோனில் தீ
உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்க் பின்புறத்தில் குடோன் உள்ளது.இதில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பெட்ரோல் பங்க் குடோனில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் கரும்புகையும் வானுயர எழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்தனர்.
இதனிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.