வேலூர் கோட்டை பூங்காவில் திடீர் தீ விபத்து

வேலூர் கோட்டை பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அலங்கார மின்விளக்குகள் எரிந்து நாசமாயின.

Update: 2023-02-05 17:15 GMT

வேலூர் கோட்டை

வேலூர் மாவட்டத்தின் அடையாளமாக வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை திகழ்கிறது. இதனை காண வேலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், ஒருபகுதியாக இரவு நேரத்திலும் கோட்டையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் வண்ண மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் கோட்டை பல்வேறு வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மின்விளக்குகள் எரிந்து நாசம்

இந்த நிலையில் கோட்டையின் வெளியே மக்கான் சிக்னல் அருகே அகழி கரையையொட்டி பூங்காவில் கொட்டப்பட்டிருந்த குப்பை திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ பரவி காய்ந்து போன புற்களில் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் பெங்களூரு சாலை புகை மூட்டமாக காணப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின்விளக்குகள், மின்ஒயர்கள் எரிந்து நாசமாயின. குப்பைகளுக்கு மர்மநபர் வைத்த தீயானது எதிர்பாராத விதமாக புற்களில் பற்றி எரிந்து அதனால் 2 மின்விளக்குகள், மின்ஒயர்கள் நாசமடைந்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்