நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில் 15 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் எரிந்து நாசமாயின.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில் 15 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் எரிந்து நாசமாயின.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மனு அளிக்க வந்த பலர் வரிசையில் நிற்க முடியாமல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தனர். கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்தார்.
திடீர் தீ விபத்து
இந்த நிலையில் கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் உள்ள அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தின் பொருள் பாதுகாப்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அங்கிருந்த பொருட்கள் மீது தீ மள, மளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பட்டாசு வெடிப்பது போல சத்தமும் கேட்டது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது குறித்த தகவல் வேகமாக பரவியது. இதன் காரணமாக அலுவலகத்தின் தரைதளம் உள்பட முதல் 3 தளங்களில் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் மனு கொடுப்பதற்காக வந்து இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மூச்சுத்திணறல்
இதனிடையே தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை கலெக்டர் அலுவலகம் முழுவதும் பரவியதால் 3-வது தளத்தில் இருந்த சில ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொருட்கள் எரிந்து நாசம்
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வாகனத்துடன் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட அரசு கேபிள் டி.வி. அலுவலக பொருள் பாதுகாப்பு அறையில் இருந்த செட்டாப் பாக்ஸ்கள், கணினி உதிரி பாகங்கள், பீரோவில் இருந்த பழைய ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின.
போலீசார் விசாரணை
தீ விபத்து காரணமாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், வழக்கமாக நடைபெறும் கூட்ட அரங்கில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து நடந்தது.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள்
விபத்து குறித்து அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் மாரிமுத்து கூறுகையில், 'கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் மாடிப்படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள ஒரு அறையை பொருள் பாதுகாப்பு அறையாக பயன்படுத்தி வந்தோம். அங்கு பழைய செட்டாப் பாக்ஸ்கள், பழைய ஆவணங்கள் வைக்கப்பட்ட பீரோ ஆகியவற்றை வைத்திருந்தோம்.
இந்த தீ விபத்தில் 15 ஆயிரம் பழைய செட்டாப் பாக்ஸ்கள், பீரோவில் வைக்கப்பட்ட பழைய ஆவணங்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். போலீசார் விசாரணைக்கு பின்னர் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்' என்றார்.