மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 'தீ'

பள்ளிபாளையத்தில் மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது.

Update: 2023-08-08 18:36 GMT

பள்ளிபாளையம்

தீ விபத்து

பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில், தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை பணியாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. மேலும் 20 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்தது. இந்த தீ விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இழப்பீடு

அதிர்ஷ்டவசமாக தீ விற்பனை நிலையத்திற்குள் செல்லாமல் தடுக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இதற்கிடையே தீ விபத்து சம்பவத்தால் மோட்டார் சைக்கிள்களை சர்வீசுக்கு விட்டு சென்ற உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சேதமடைந்த இரு சக்கர வாகனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள், தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்