ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ

பட்டிவீரன்பட்டி அருகே ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2023-05-20 21:00 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள கே.சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு சொந்தமான ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனம் அதே ஊரில் உள்ளது. நிறுவன வளாகத்திலேயே குடோனும் உள்ளது. இந்தநிலையில் அந்த குடோனில் பழைய துணிகளை வைத்திருந்த அறையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த நிறுவன ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர்.

இருப்பினும் தீ மளமளவென துணிகள் மீது பரவியது. உடனே இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்