வேலகவுண்டம்பட்டி அருகே மின்கசிவால் குடிசையில் தீ விபத்துரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

Update: 2023-06-03 19:00 GMT

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே மின்கசிவால் டிரைவரின் குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

டிரைவர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம் தம்மநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சென்னப்பன். இவருடைய மகன் குமார் (வயது 33), டிரைவர். இவர் தற்போது புதிய வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக அதற்கு அருகில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று புதிய வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக வெளியூர் சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரது மகன் குடிசை வீட்டில் இருந்து புகை வருவதாக கூறி போன் செய்துள்ளார். இதனையடுத்து வெளியில் சென்றிருந்த குமார் அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்தார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

விசாரணை

எனினும் குடிசை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் குமார் புதிய வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், 12 பவுன் நகை, வீட்டு பத்திரம், வெள்ளி பொருட்கள், துணிமணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

மின்கசிவு காரணமாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்