தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

Update: 2023-05-29 16:44 GMT


சொத்து பிரச்சினையில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற தம்பதி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு தம்பதி கூட்ட அரங்கிற்கு முன்பு திடீரென்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து, குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து 2 பேர் மீதும் ஊற்றினார்கள்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மற்றும் அவருடைய 2-வது மனைவி தங்கமணி என்பது தெரியவந்தது.

சொத்தை வாங்கிக்கொடுங்கள்

சீனிவாசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் செல்வி. இரண்டாவது மனைவியின் பெயர் தங்கமணி. முதல் மனைவிக்கு 1 மகன், 2-வது மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நான் 2-வது மனைவியுடன் 32 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது தந்தை, தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவியின் மகனுக்கு தானம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.

எனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மருத்துவ செலவு ஆகிறது. எனது 2-வது மனைவியின் மகன், மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எனக்கு சேர வேண்டிய சொத்தை வாங்கிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

பரபரப்பு

சீனிவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சீனிவாசனின் தாயார், பூர்வீக சொத்தை தனது பேரனுக்கு தானமாக எழுதிக்கொடுத்துள்ளார். சீனிவாசன் 2-வது திருமணம் செய்து கொண்டு சென்றதால், அவர் தாயார் இவ்வாறு செய்துள்ளார். பெருமாநல்லூர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த சொத்துக்கள் முதல் மனைவியின் மகன் பெயருக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. சீனிவாசன், கோர்ட்டு மூலமாக தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்