திருப்பூரில் கழிவு பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சரக்கு ஆட்டோக்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 சரக்கு ஆட்டோக்கள் எரிந்தது
திருப்பூர் காங்கயம் ரோடு காங்கயம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் வீரபாகு (வயது 55). இவர் அந்தப்பகுதியில் கழிவு பனியன் குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த குடோன் தகர ஷீட்டால் அமைக்கப்பட்டு இருந்தது. வாடகை அடிப்படையில் அந்த இடத்தில் வீரபாகு குடோனை அமைத்திருந்தார்.
நேற்று அதிகாலை 3.15 மணிக்கு குடோனுக்குள் தீப்பற்றி எரிந்தது. இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழைய துணிகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. குடோனுக்குள் நிறுத்தி வைத்திருந்த 2 சரக்கு ஆட்டோக்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. 1 மோட்டார் சைக்கிளும் சேதமானது. 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் தீயை அணைத்தனர்.
லட்சக்கணக்கில் சேதம்
குடோனுக்கு மின்சார இணைப்பு இல்லை. இந்த குடோனுக்கு பின்புறம் குப்பைகள் அதிகம் உள்ளது. அந்த குப்பையில் தீப்பற்றி குடோனுக்குள் பரவியிருக்கலாம் என்று தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.