தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Update: 2023-07-18 17:31 GMT


மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து

மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் கன்னிமுத்து என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இங்கு காய வைத்திருந்த தென்னை மட்டைகளில் நேற்று காலை திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் மளமளவென்று பரவிய தீ அருகிலுள்ள தென்னை நார் பண்டல்களுக்கு பரவியது.உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் மளமளவென்று பரவிய தீ அங்கிருந்த எந்திரங்களுக்கு பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் போராடினர். அவர்களுக்கு உதவியாக பொக்லைன் எந்திரங்கள் மற்றும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பல மணி நேர போராட்டத்துக்குப்பிறகே தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

தென்னை நார் தொழிற்சாலையில்

பயங்கர தீ விபத்துதென்னை நார் தொழிற்சாலையில்

பயங்கர தீ விபத்து

இந்த பயங்கர தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் டிராக்டரில் பின்புறம் இணைக்கக் கூடிய டிரெய்லர் உள்ளிட்டவை எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது.மேலும் இருப்பு வைத்திருந்த தென்னை நார்கள் மற்றும் தேங்காய் மட்டைகள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல கடந்த சில நாட்களுக்கு முன் கணியூர் பகுதியிலுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக ஏற்படும் தீ விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்