மாவட்டத்தில் இன்று முதல் போக்குவரத்து விதிமீறலுக்கு புதிய அபராதம்-தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தல்

Update: 2022-10-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் புதிய அபராதம் விதிக்கும் முறை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறை தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

புதிய அபராதம்

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவுத்துள்ளது. இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாமல் இருப்பது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்வது, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது, 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, சிக்னலில் வெள்ளைக்கோட்டை தாண்டி நிற்பது ஆகிய விதி மீறல்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு

இதேபோன்று மது போதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வருபவருக்கு ரூ.5 ஆயிரம், தடை செய்யப்பட்ட பகுதியில் செல்பவருக்கு ரூ.500, ஒரு வழி பாதையில் எதிர் திசையில் செல்பவருக்கு ரூ.500 என பல்வேறு விதிமீறல்களுக்கு புதிய அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அறிவுறுத்தல்

தர்மபுரி நகரில் 4 ரோடு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, எஸ்.வி.ரோடு, பைபாஸ் ரோடு, மதிகோன்பாளையம், பென்னாகரம் ரோடு, பெரியார் சிலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம் ஆலோசனையின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த புதிய அபராதம் வசூலிக்கும் முறை தீவிரமாக கடைப்பிடிக்கப்படும், விதிமுறைகளை மீறும் நபர்களிடமிருந்து நவீன கருவி மூலம் ஆன்லைனில் உடனடி அபராதம் வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

அரூர்

இதேபோல் அரூரிலும் விதி மீறலுக்கு புதிய அபராதம் குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். 

மேலும் செய்திகள்