சினிமா இயக்குனர் வீட்டில் கொள்ளை: திருட்டு நகையை வாங்கிய நிதி நிறுவன ஊழியர் கைது

ஈரோட்டில் சினிமா இயக்குனர் வீட்டில் திருடிய நகையை வாங்கிய நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-09 21:34 GMT

ஈரோட்டில் சினிமா இயக்குனர் வீட்டில் திருடிய நகையை வாங்கிய நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சினிமா இயக்குனர்

ஈரோடு நாடார் மேடு கெட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவ ஹரிகேசவா என்கிற மோகன் குமார் (வயது 45). சினிமா இயக்குனர். கடந்த 21-ந்தேதி குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி விட்டு, வழக்கம்போல் வீட்டின் சாவியை ஜன்னலில் மறைத்து வைத்து சென்றார்.

அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து மோகன் குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 5¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோகன் குமார் இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

நிதி நிறுவன ஊழியர்

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டு சம்பவம் நடந்த வீடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் தமிழரசு (23) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் தமிழரசுவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழரசு திருடிய நகையை ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாக தெரிவித்தார். அதன்பேரில் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு சென்ற போலீசார் திருட்டு நகையை வாங்கிய அந்த நிறுவனத்தின் ஊழியரான சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி (41) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்