சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

Update: 2022-09-19 00:14 GMT

பூந்தமல்லி,

'வாய்தா' என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவரான இவர், சினிமா ஆசையால் சென்னை வந்து தனியாக தங்கி இருந்தார்.

நடிகர் விஷாலின், 'துப்பறிவாளன்', விஷ்ணு விஷாலின், 'ராட்சசன்' உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் 'டிக்டாக்' மற்றும் சமூக வலைதளம் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அழகு மற்றும் இவரது குறும்புத்தனமான நடிப்பு வீடியோக்கள் 'யூடியூப்', முகநூல், 'இன்ஸ்டாகிராம' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளங்களையே உருவாக்கி கொடுத்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நடிகை பவுலின் ஜெசிகா, தனது நண்பர் சிராஜுதின் என்பவரிடம் செல்போனில், "எனக்கு வாழ பிடிக்கவில்லை. யாரும் எனக்கு ஆதரவாக இல்லை" என விரக்தியுடன் பேசிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அதே பகுதியில் உள்ள தனது நண்பரை நடிகை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவர், பவுலின் ஜெசிகா வசித்த வீட்டுக்கு சென்றபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

அவர் உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் உள்ளே நடிகை பவுலின் ஜெசிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு தலை காதல்

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நடிகை பவுலின் ஜெசிகா, 'வாய்தா' என்ற படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதற்கு முன்பாக சில தமிழ்படங்களில் துணை நடிகையாக சிறு சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார். 'டிக்-டாக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தான் குறும்புத்தனமாக நடித்த வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்துடன் நடிகை பவுலின் ஜெசிகா, ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தநபர், இவரை காதலிக்கவில்லை எனவும், ஒருதலையாகவே பவுலின் ஜெசிகா காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் நடிகை வசித்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் நடிகை பவுலின் ஜெசிகா, "எனக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை. நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இதனால் இந்த உலகில் வாழ எனக்கு விருப்பமில்லை. எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பவுலின் ஜெசிகாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, கடைசியாக அவர் யாருக்கெல்லாம் போன் பேசி உள்ளார்? அவரிடம் தொடர்பு கொண்டு பேசியது யார்? என விசாரித்து வருகின்றனர். நடிகையின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு தலை காதல் விவகாரத்தில் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்