பிற மொழி பெயர் பலகையை கருப்பு மையால் அழித்து போராடுங்கள்

பிற மொழி பெயர் பலகையை கருப்பு மையால் அழித்து போராடுங்கள் என்று திண்டிவனத்தில் நடந்த தமிழைத்தேடி பிரசார பயண பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2023-02-23 18:45 GMT

திண்டிவனம்:

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனரும், பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் நடத்தும், 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பிரசார பயணத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 21-ந் தேதி தொடங்கினார். இந்த பிரசார பயணம் 8 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 28-ந்தேதி மதுரையில் நிறைவடைகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் காந்தியார் திடலில் தமிழைத்தேடி பிரசார பயண பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

கருப்பு மையால் அழித்து போராடுங்கள்

நான் 12-ம் வகுப்பு வரை தமிழில் தான் படித்தேன். மறைந்த ஜனாதிபதிகள் அப்துல்கலாம், வெங்கட்ராமன், முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா உள்பட பலர் தமிழ் மொழியில் தான் படித்தனர். தமிழகத்தில் 50 ஆயிரம் புலவர்கள் ஓய்வு பெற்றும், 50 ஆயிரம் தமிழ் புலவர்கள் பணியிலும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழை தேடவேண்டும். தமிழை தவிர பிற மொழிகளில் பெயர் பலகை இருந்தால் அதனை உடனடியாக கருப்பு மையால் அழித்து, அதில் தமிழில் பெயர் எழுத போராடுங்கள். தற்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் புரியவில்லை. எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் தான் உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தற்போது அப்பா, அம்மா என்று அழைக்க சொல்லி வலியுறுத்துவது இல்லை. மாறாக மம்மி, டாடி என்று அழைக்க சொல்கிறார்கள். இது தவறாகும்.

தமிழை தாருங்கள்

நாம் பேசும் வார்த்தைகளில் பல மொழிகள் கலந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த மதபோதகர் ஒருவர், தமிழை கற்று தன்னுடைய பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். என்னிடம் 102 தமிழ் அறிஞர்கள் எங்கள் உயிரை தருகிறோம் எங்களுக்கு தமிழை தாருங்கள் என்றனர். அதனுடைய தாக்கம் தான் இந்த தமிழைத்தேடி பயணம். தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர்கள் கருணாநிதி, சங்கர், சமூக நீதிப்பேரவை மாநில செயலாளர் வக்கீல் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜி, சுப்பராயலு, ரத்தினம் யாதவ், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் தர்மன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சஞ்சியப்பா, வன்னியர் சங்க நகர செயலாளர் பூதேரி ரவி, மாவட்ட தலைவர் பாவாடைராயன், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திண்டிவனம் நகர செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்