பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவது குறித்து தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே தள்ளுமுள்ளு

Update: 2022-12-21 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பாலக்கோடு, மல்லாபுரம், பெல்ரம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, சாமனூர், காரிமங்கலம், பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கரும்பை அரவைக்காக கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை நேற்று தொடங்கியது. அரவையை தொடங்கி வைக்க முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.பழனியப்பன் தலைமையில் கட்சியினர் குவிந்தனர். இதேபோல் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சியினர் திரண்டனர். அவர்களுக்கிடையே கரும்பு அரவையை யார்? தொடங்கி வைப்பது என்று போட்டி ஏற்பட்டது. மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பி.பழனியப்பன், கே.பி.அன்பழகன் ஆகியோர் கரும்பு அரவையை தொடங்கி வைத்தனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கோவிந்தசாமி, ஆலை தலைவர் நாகராசன், பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், அரசு வக்கீல் முருகன், மேலாண்மை இயக்குனர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்