அரசு பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் உள்பட 15 பேர் காயம்
அரசு பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
திருச்சி:
அரசு பஸ் கவிழ்ந்தது
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் செங்குட்டுவன் (வயது 53) ஓட்டினார். பஸ்சில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திருவானைக்காவல் பாலத்தில் அந்த பஸ் சற்று வேகமாக வந்ததாக தெரிகிறது.
மாம்பழச்சாலை அருகே வந்தபோது பஸ்சின் முன்னால் சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் செங்குட்டுவன் பஸ்சை இடது பக்கம் வேகமாக திருப்பினார். இதில் சாலை ஓரத்தில் இருந்த நடைமேடையில் பஸ் மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த பஸ்சில் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.