காங்கிரஸ்-பா.ஜனதாவினர் இடையே பயங்கர மோதல்; 4 பேர் காயம்
நாகர்கோவிலில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தடி, கற்களால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தடி, கற்களால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
காங்கிரசார் போராட்டம்
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. பின்னர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியையும் பறித்து நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், மொட்டை அடித்து போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
பா.ஜனதா அலுவலகம் முன்பு திரண்டனர்
இந்தநிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் காங்கிரஸ் கட்சி கொடிகளை கையில் ஏந்தியபடி நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டனர். அப்போது செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் நோக்கி சென்றனர்.
பின்னர் பா.ஜனதா அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்
காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு இடையே காங்கிரசார் சிலர் பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஏற்கனவே பா.ஜனதா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை அறிந்த அவர்கள் உடனே கூட்டத்தை கைவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அங்கு காங்கிரஸ் கட்சியினர் நின்றதை பார்த்ததும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கண்டித்தனர்.
பயங்கர மோதல்
ஆனால் கலைந்து செல்ல மாட்டோம் என காங்கிரசார் கூற அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் திட்டிக் கொண்ட அவர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
கட்சி கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரசார், பா.ஜனதாவினரை தாக்க, பதிலுக்கு அவர்கள் அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த களேபரத்துக்கு இடையே பா.ஜனதா அலுவலகத்தின் மீதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் காங்கிரசார் கற்களை வீசினர். இது பா.ஜனதாவினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு அவர்களும் தொடர்ந்து கற்களை வீசவே பதற்றம் அதிகரித்தது.
பயங்கர மோதலை பார்த்து வாகன ஓட்டிகள் தலைதெறித்தபடி அங்கிருந்து வேகமாக சென்றனர். ஒரு கட்டத்தில் பா.ஜனதாவினர் எண்ணிக்கை கூடியதால் அங்கிருந்த காங்கிரசார் கலைந்து சென்றனர்.
4 பேர் காயம்
இந்த மோதல் சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை சிறிது நேரம் போர்க்களம் போல காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் கட்சி கொடிகள், கம்புகள், செருப்புகள் சாலையில் சிதறிக் கிடந்தன.
இந்த பயங்கர மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.
இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் மோதல் முடிவிற்கு வந்தது.
சாலை மறியல்
அதே சமயத்தில் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வன்முறை நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என கூறியபடி பா.ஜனதாவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரசாரை கைது செய்யும் வரை தொடர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்ததால் அங்கு கூடுதல் பதற்றம் உருவானது.
இந்த மறியலில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். போராட்டம் நீடித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் சமாதானம் அடைந்த பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் செட்டிகுளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் சந்திப்பு வரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடிகள் எரிப்பு
காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது பதற்றமடைந்த கடைக்காரர்கள் கடையை மூடினர். சுமார் 1 மணி நேரமாக நீடித்த பதற்றம் தணிந்த பிறகு தான் அவர்கள் படிப்படியாக கடைகளை திறக்க ஆரம்பித்தனர்.
மோதலின் போது காங்கிரசார் கொண்டு வந்த ஏராளமான கட்சி கொடிகள் அந்த பகுதியில் சிதறிக் கிடந்தன. இதனை சேகரித்த பா.ஜனதாவினர் அதனை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.