சொந்த ஊருக்கு வந்த மக்கள் வெளியூர் புறப்பட்டனர்
பொங்கல் பண்டிகை முடிந்ததால் சொந்த ஊருக்கு வந்த மக்கள் வெளியூர் புறப்பட்டதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
தஞ்சாவூர், ஜன.18-
பொங்கல் பண்டிகை முடிந்ததால் சொந்த ஊருக்கு வந்த மக்கள் வெளியூர் புறப்பட்டதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் பணி புரியும் மக்கள் தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 13-ந் தேதி முதல் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழர் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடிவிட்டு மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு திரும்பி செல்கின்றனர். இவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பஸ்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகஅளவில் இருந்தது. அதேபோல் தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் முன்பதிவு முடிந்து சென்னைக்கு செல்ல காத்திருந்த மக்களுக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.இதனால் விரைவு பஸ்களில் இடம் கிடைக்காதவர்கள் புறநகர் பஸ்கள் மூலம் சென்னைக்கு சென்றனர். அதேபோல் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் உழவன் விரைவு ரெயில் மற்றும் தஞ்சை வழியாக சென்னைக்கு சென்ற விரைவு ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் பொதுபெட்டியில் படிகட்டில் தொங்கியபடியே சிலர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.