சத்தி தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிழாகம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகிறார்கள்..
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
பூச்சாட்டப்பட்டது
சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. தண்டுமாரியம்மனை பண்ணாரி மாரியம்மனின் அக்காள் என பக்தர்கள் அழைக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 19-ந்தேதி பூச்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அன்று பகல் 11 மணி அளவில் ஆண்களும், பெண்களும் என ஏராளமான பக்தர்கள் கார்கள், இருசக்கர வாகனங்கள், 4 லாரிகளில் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டமாளம் மலைக்கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த தனியாருக்கு சொந்தமான ஆலமரத்தை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
கம்பம் நடப்பட்டது
அதன்பின்னர் அன்று இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை கம்பத்தை 3 கவுட்டிகளாக வடிவமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கம்பம் உயரம் 16 அடியும், பருமன் 4 அடியாகவும் இருந்தது. இதுதான் ஈரோடு மாவட்டத்திலேயே உயரமான தடிமனான கம்பம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4 அடி ஆழத்துக்கு குழி வெட்டி அதில் கம்பம் நடப்பட்டது. அதன்பின்னர் தண்டு மாரியம்மன் மற்றும் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கம்பத்தை சுற்றி நள்ளிரவு 12 மணி வரை ஆடினார்கள். தொடர்ந்து வருகிற 2-ந் தேதி வரை தினமும் பக்தர்கள் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை கம்பத்தை சுற்றி ஆடி மகிழ்வார்கள்.
நேற்று பெண்கள் ஏராளமானோர் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
குண்டம் இறங்கும் விழா
வருகிற 2-ந் தேதி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி குண்டம் இறங்கும் விழாவும், 4-ந் தேதி இரவு கம்பம் பிடுங்குதலும், 5-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
அப்போது உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படும். 11-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவின் தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.