மதுரை வீரன் கோவிலில் உற்சவ திருவிழா
அக்கராயபாளையம் மதுரை வீரன் கோவிலில் உற்சவ திருவிழா பால் குடம் சுமந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
சின்னசேலம்
சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட கச்சிராயப்பாளையம் கிராம எல்லை அக்கராயபாளையம் மும்முனை சந்திப்பில் உள்ள மதுரைவீரன், சக்தி மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 23-ம் தேதி வாஸ்து சாந்தி, புதிதாக முருகன், கணபதி உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை செய்து யாக, ஹோம பூஜைகளும், 23-ந் தேதி சக்தி அழைப்பு, 24-ந் தேதி கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.
நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காலை 11.30 மணியளவில் காந்திநகரில் இருந்து மேள, தாள இசையுடன் பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு அக்கராயபாளையம் மெயின்ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான முப்பூஜை இன்று(ஞாயிற்றுக்கிழமை) பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. இதில் மதுரை வீரன் பிறப்பு, பொம்மியை சிறை எடுத்தல், பாண்டிநாட்டு படைத்தளபதியான மதுரைவீரன் மாறுகால், மாறுகை வாங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து மதுரை வீரன் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.