காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறதுசுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்பு

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-03-13 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடக்கம்

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இதை தொடர்ந்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்குவார்கள். விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கோவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

சுமங்கலி பூஜை

22-ந்தேதி காலை கோவில் பால்குடம், காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், 24-ந் தேதி மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கள நாண், மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்