ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகள் உற்சாகம்

ஆடி மாத பிறப்பையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாப்பட்டது.

Update: 2022-07-17 18:07 GMT

ஆடி மாத பிறப்பையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாப்பட்டது.

அழிஞ்சி குச்சி

ஆடி மாத பிறப்பையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாலை பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், புதுமண தம்பதியினர் தேங்காய் சுட்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர்.

இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயுடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் தலை ஆடி பண்டிகையை கொண்டாடினர். நாமக்கல் நகரில் நேற்று சுவாமிநகர், தில்லைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தலை ஆடியையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை ஆங்காங்கே தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சாமி தரிசனம்

ஆடிமாத பிறப்பையொட்டி நேற்று பலப்பட்டரை மாரியம்மன் கோவில், அழகுநகர் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் மோகனூர், பரமத்திவேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்