யூரியா தட்டுப்பாட்டால் மகசூல் பாதிக்கும் அபாயம்

யூரியா தட்டுப்பாட்டால் மகசூல் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-24 11:13 GMT

போடிப்பட்டி

தற்போது நிலவி வரும் கடுமையான யூரியா தட்டுப்பாட்டால் மகசூல் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

யூரியா உரம்

விவசாயிகளுக்கு 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியா ரூ. 266.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் ஒவ்வொரு மூட்டை யூரியாவுக்கும் ரூ. 1500- க்கு மேல் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதனால் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு கள்ளச்சந்தையில் யூரியா விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.மேலும் திரவ யூரியா, நீம் கோட்டட் யூரியா உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியாவின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது யூரியாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மடத்துக்குளம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது யூரியா உரம் இட்டாக வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆனால் உரக்கடைகளிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ யூரியா உரம் இருப்பு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இதனால் கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.

அமோனியம் சல்பேட்

இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், யூரியா தேவை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். தற்காலிகமாக யூரியாவுக்கு மாற்றாக விவசாயிகள் அம்மோனியம் சல்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் யூரியாவில் நைட்ரஜன் அளவு 46 சதவீதம் ஆக உள்ள நிலையில் அம்மோனியம் சல்பேட்டில் 21 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் யூரியாவை விட 2 மடங்கு பயன்படுத்த வேண்டும்.எப்போதுமே தேவைக்கு அதிகமாக உரங்களை பயன்படுத்துவதால் விளைச்சல் நிச்சயமாக அதிகரிக்காது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்