உசிலம்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு
உசிலம்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யூரியா தட்டுப்பாடு
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, எழுமலை பகுதியில் தற்போது பெய்துள்ள தொடர் மழையின் காரணமாக கண்மாய், கால்வாய், கிணறுகள் மூலம் பாசனம் பெறும் பெரும்பாலான விவசாயிகள் நெல்லும், மானாவாரியில் பருத்தியும் பயிரிட்டுள்ளனர். நெல் நடவு செய்த 21-வது நாளில் யூரியா, பொட்டாஷ் உரமிட வேண்டும். பருத்திக்கு 30 நாட்களில் இதே உரமிட வேண்டும்.
இந்நிலையில் உரக்கடைகளில் யூரியா வாங்க செல்லும் விவசாயிகளிடம் உரத்தட்டுப்பாடு உள்ளதாக கூறி விலை அதிகரித்து விற்பனை செய்வதாகவும், யூரியா வாங்கும் விவசாயிகள் ஆதார் அட்டை கொண்டு சென்று, ஆன்லைனில் ஏற்றி ரசீது கொடுக்க வேண்டும் என்றும், இந்த வழிமுறைகள் எதுவும் கடைபிடிக்காமல் இருப்பு இல்லை என காரணம் காட்டி விலையை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, உசிலம்பட்டி, சேடப்பட்டி, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் போதிய அளவுக்கு யூரியா இருப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் உரக்கடையில் யூரியா இருப்பு இல்லை என்று கூறி விவசாயிகளை அலைக்களித்து வருகின்றனர் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு முறையாக உரம் கிடைக்க வேளாண்மை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாவார்கள். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.