இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது
வாணியம்பாடி நகராட்சியில் காய் கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
வாணியம்பாடி நகராட்சியில் காய் கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
வாணியம்பாடி நகராட்சி வளையாம்பட்டு, ராமையன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படும் நுண் உரம் செயலாக்க மையங்களிலும் நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டம், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகளை 6 பகுதிகளாக பிரித்து அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து அதில் மக்கும் குப்பைகளை வளையாம்பட்டு, பெரியபேட்டை, ராைமயன்தோப்பு, நூருல்லாபேட்டை உள்ளிட்ட நகராட்சிக்கு சொந்தமான 6 இடங்களில் செயல்படும் நுண் உர செயலாக்கம் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இயற்கை உரம்
அங்கு காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் குப்பைகளை இயந்திரம் மூலம் அரைத்து இயற்கை உரமாக தயாரிக்கபடுகிறது. இந்த உரங்கள் அனைத்தும் 100 கிலோ முதல் 900 கிலோ வரை விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. தற்சமயம் 10 டன் அளவிற்கு மேல் இயற்கை உரம் உள்ளது. ஆகவே வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் இயற்கை உரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் மக்காத குப்பைகளை தனியார் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி பொறியாளர் சங்கர், மேலாளர் ஜெயபிரகாஷ், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.