புனேவில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,210 டன் உரம் வந்தது-7 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை

Update: 2022-12-19 18:45 GMT

தர்மபுரி:

பூனேவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,210 டன் உரம் கொண்டு வரப்பட்டது. இந்த உரங்கள் 7 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது.

உரம் வந்தது

தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. இந்த நிலையில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூனேவில் இருந்து 1,210 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் இந்த உரங்களை தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை தர்மபுரி மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரித்து அனுப்ப நடவடிக்கை

இதன்படி தர்மபுரிக்கு 673 டன், கிருஷ்ணகிரிக்கு 270 டன், சேலத்திற்கு 74 டன், ஈரோட்டுக்கு 50 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன. இதேபோல் தேனிக்கு 75 டன், திண்டுக்கல்லுக்கு 50 டன், திருப்பத்தூருக்கு 18 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வின் போது விற்பனை மேலாளர் கார்த்திகேயன், மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் அரசின் மானிய விலை உரங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்