உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் நிலவி வரும் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-08-30 18:58 GMT

கடலூர், 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கான மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-

தூர்வார வேண்டும்

செல்வராஜ் (விவசாயி):- பெலாந்துறையில் இருந்து பாளையங்கோட்டை வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரிய வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வெள்ளாறு தண்ணீர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் மழைநீரும் சேர்ந்து வருவதால் அடிக்கடி கரைகள் உடைகிறது. ஆகவே இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். மேலும் அதன் கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.

ஜெயலட்சுமி (விவசாயி):- மேல் புளியங்குடியில் உள்ள ஏரி 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- மேல்புளியங்குடி ஏரிஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படைப்புழு தாக்குதல்

மணிகண்டன் (விவசாயி):- மங்களூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே படைப்புழுவை கட்டுப்படுத்த ரூ.40 லட்சம் செலவில் பூச்சி மருந்து வாங்கப்பட்டது. அந்த மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மங்களூர் ஒன்றிய பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. இதை போக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- 1500 டன் உரம் கேட்டு இருக்கிறோம். உரம் வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

உரத்தட்டுப்பாடு

மாதவன் (விவசாயி) :- வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆகவே தரமான நெல் விதைகள் வழங்க வேண்டும். குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசு வழங்கிய நெல் கலப்படமாக இருந்ததால் முளைப்பு திறன் இல்லை. மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி. உரங்கள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதை போக்க வேண்டும்.

ரவீந்திரன் (விவசாயி) :- கடைமடைப்பகுதி விவசாயிகளுக்கு அக்டோபர் மாதம் தண்ணீர் கிடைக்கப் பெற்று நெல் சாகுபடிக்கு பிறகு உளுந்து, பயிறு சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கடந்த 13 நாட்களில் 184 டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்துள்ளது. இதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அருவா மூக்கு திட்டம்

முன்னதாக பூவாலை தமிழ்வாணன், கீழ்பரவனாற்றை தூர்வார வேண்டும். அருவா மூக்கு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று பதாகையை கையில் ஏந்தியபடி கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் குஞ்சிதபாதம், முருகானந்தம், தேவநாதன், செந்தில்முருகன், கலியபெருமாள், பரமசிவம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டதுக்கு பெரும்பாலான அரசு உயர் அலுவலர்கள் வரவில்லை. இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர், அடுத்த கூட்டத்துக்கு அனைவரும் வரவேண்டும். வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்