தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகள் சித்ரா (வயது 29). கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் இவருக்கும் ஆரணியை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா, மாதவன் இருவரும் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதாக கூறி சித்ராவை இளையனார் வேலூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தமிழரசி (1½) என்ற மகள் உள்ளார்.
தீனதயாளன் விவாகரத்து பெற்றதாக பொய் கூறி திருமணம் செய்தது சித்ராவுக்கு தெரிய வந்தது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணத்திற்கு வழங்கிய 10 பவுன் நகையை தாய் வீட்டில் வைத்திருக்கிறாய். அதை கொண்டு வா என்று கூறி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
குழந்தை தமிழரசியை தன்னுடன் வைத்துக்கொண்டு சித்ராவை குழந்தையை பார்க்க விடாமல் செய்ததாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்கு சென்ற சித்ரா கணவரின் துன்புறுத்தல் குறித்து காஞ்சீபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
நேற்று முன்தினம் காலையில் சித்ராவின் தாய் மற்றும் அவரது தம்பி சதீஷ் வீட்டின் முன்புறமுள்ள டிபன் கடையில் இருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சித்ராவால் குழந்தையையும் பார்க்க முடியவில்லை. வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்ராவின் தம்பி சதீஷ் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கிரி சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.