திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த செங்கேணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் செல்வராஜ் (வயது 33). இவருக்கும் செஞ்சி தாலுகா நெகனூர் பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் சங்கீதா (28) என்பவருக்கும் இடையே கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தருண்ராஜ் (1½) என்கிற குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் இருந்து நகை மற்றும் பணம், வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு, செல்வராஜ், சங்கீதாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கடந்த தீபாவளி பண்டிகை அன்றும் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, சங்கீதாவை அவரது உறவினர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
தற்கொலை
இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த சங்கீதா நேற்று, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் அங்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக சேகர் வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், தனதுமகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அ தன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கீதா எவ்வாறு இறந்தார்?, சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.