பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம் 27-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஆஜராக உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் 27-ந் தேதியன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் 13 நாட்களாக குறுக்கு விசாரணையை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
அதனை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும் தற்போது கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான சக்திகணேசன், நீதிபதி புஷ்பராணி முன்பு நேரில் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.
பின்னர் ஏற்கனவே சாட்சியம் அளித்து முடித்த சென்னை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், திருச்சி மாவட்டம் முசிறி இன்ஸ்பெக்டர் விதுன்குமார் ஆகிய இருவரிடமும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.
சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஆஜராக உத்தரவு
இந்த குறுக்கு விசாரணை முடிந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, இவ்வழக்கின் புகார்தாரரின் கணவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபனிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்வது மிகவும் அவசியம் என்பதால் அந்த குறுக்கு விசாரணையை முடித்த பின்னர் மற்ற சாட்சிகளை விசாரிக்கும்படியும், இதுசம்பந்தமாக நாங்கள் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் வாதிட்டார்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன், கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பராணி, அம்மனு மீதான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சியான கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும் தற்போது சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான ஜியாவுல்ஹக் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.