பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்

அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

Update: 2023-02-13 19:00 GMT


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொட்டிசெட்டிபட்டியை அடுத்த கன்னிமாநகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). விவசாயி. இவருக்கும், பள்ளப்பட்டியை சேர்ந்த நாச்சியப்பனுக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மகன் சதீஷ்கண்ணன் (23), தனது தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது நாச்சியப்பன், அவருடைய நண்பர்களான சங்கர், சின்னகருப்பு ஆகியோர் சதீஷ்கண்ணனிடம் தகராறு செய்ததோடு, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் சதீஷ்கண்ணன் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சதீஷ்கண்ணனின் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதன்பின்னரும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாண்டி கடந்த 8-ந்தேதி அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று கேட்டபடி அவர் விஷம் குடித்தார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இதைத் தொடர்ந்து பாண்டியின் உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே பாண்டியின் தற்கொலைக்கு காரணம் என்றும், போலீஸ் நிலையத்தில் வைத்து பாண்டி விஷம் குடிக்கும் போது போலீசார் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து நாச்சியப்பன், சங்கர், சின்னகருப்பு ஆகியோரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாண்டி விஷம் குடித்து மயங்கிய போது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி செல்போனில் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறை ரீதியான விசாரணை

இதற்கிடையே அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையின் அடிப்படையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இந்த சம்பவம் திண்டுக்கல் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்