பெண் பயணி பணத்துடன் தவறவிட்ட பர்ஸ் ஒப்படைப்பு
தக்கலை பஸ் நிலையத்தில் பெண் பயணி பணத்துடன் தவறவிட்ட பர்ஸ் ஒப்படைப்பு
தக்கலை,
வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் திங்கள்சந்தை செல்வதற்காக அரசு பஸ் மூலம் தக்கலைக்கு வந்தார். அங்கு தனது பர்சை தொலைத்து விட்டு அவசரமாக ஓடி சென்று திங்கள்சந்தை செல்லும் பஸ்சில் ஏறினார். அந்த பர்சில் ரூ.5100 பணம், ஏ.டி.எம்.கார்டுகள், ரேஷன்கார்டு, பேன் கார்டு போன்றவை இருந்தன.
சிறிது நேரம் கடந்து அவர் பஸ்சில் இருந்து இறங்கி கீழே வந்து பஸ்நிலையத்தில் உள்ள சமய குறிப்பாளர் அறைக்கு சென்று பர்ஸ் தொலைந்த விவரத்தை கூறினார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் '50 வயதுடைய ஒரு பெண் இருக்கையில் இருந்த பர்சை கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார்', என்றனர். தொடர்ந்து இளம்பெண் கூறிய அடையாளங்களை சரி பார்த்த போது அது அவருடைய பர்ஸ் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த பர்சை பணத்துடன் பெண் பயனியிடம் ஒப்படைத்தனர்.