பெண் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற வாலிபர் படுகாயம்
சென்னை பெரம்பூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் காப்பாற்ற முயன்ற வாலிபர் படுகாயமடைந்தார்.
சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் மரகதம் (வயது 45). இவருடைய கணவர் குமார், 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன், மாதவரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த மரகதம், அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (30) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மரகதம் வீட்டில் கணவன்-மனைவி போல் ஒன்றாக வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் சந்திரசேகர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மரகதம், வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது சந்திரசேகர் உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரகதம் பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரசேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.