கன்னியாகுமரியில் ராட்சத அலை இழுத்து சென்றதில் மீட்கப்பட்ட பெண் என்ஜினீயர் சாவு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கன்னியாகுமரியில் கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்து சென்ற போது மீட்கப்பட்ட பெண் என்ஜினீயர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஐ.டி. ஊழியர்கள்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த 10 ஊழியர்கள் கடந்த 31-ந் தேதி வேனில் சுற்றுலா புறப்பட்டனர். தமிழகத்தில் ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு 3-ந் தேதி அதிகாலையில் கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்கு விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அனைவரும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர்.
பின்னர் கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி மணி (வயது 30), சுரேஷ் (32), பிந்து (25) ஆகிய 3 பேர் கடலில் மூழ்கினர்.
2 பேர் பிணமாக மீட்பு
இதுபற்றி சக சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது பிந்து ஒரு பாறையை பிடித்து கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் மீட்டனர். அதே சமயத்தில் அவர் கடல் தண்ணீரை அதிகம் குடித்த நிலையில் மிகவும் சோர்வாக காணப்பட்டார். உடனடியாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே ராட்சத அலை இழுத்துச் சென்றதில் மணி, சுரேஷ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளம்பெண்ணும் பலி
இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பிந்து நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது உடலை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் என்ஜினீயரான பிந்து இறந்ததையடுத்து கடலில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.