சோலைவனமாக இருந்த சாலை பாலைவனமாக மாறியது

காரைக்குடி-மேலூர் இடையே நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் சோலைவனமாக இருந்த சாலை பாலைவனமாக மாறியுள்ளது.

Update: 2022-09-30 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி-மேலூர் இடையே நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் சோலைவனமாக இருந்த சாலை பாலைவனமாக மாறியுள்ளது.

சாலை விரிவாக்க பணி

நாளுக்கு நாள் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தடுக்க ஏற்கனவே இருந்த சாலைகளை விரிவாக்கம் செய்து பைபாஸ் சாலைகளாகவும், நான்கு வழிச்சாலையாகவும் மத்திய அரசு மாற்றி வருகிறது. அந்த வகையில் காரைக்குடி-மேலூர் இடையே சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது.

இந்த சாலை விரிவாக்க பணிக்கு முன்பு காரைக்குடி அருகே பாதரக்குடி முதல் திருப்பத்தூர் வரை சாலையோரத்தில் பச்சை பசேலென கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சோலை வனமாக இப்பகுதி காட்சியளித்தது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த இயற்கை காட்சியை ரசித்துவிட்டுதான் செல்வார்கள். கோடைகாலங்களில் வெப்பத்தை தணிப்பதற்காக இந்த மரங்களின் நிழலில்தான் வாகன ஓட்டிகள் தஞ்சமடைந்து இளைப்பாறி செல்வார்கள்.

பாலைவனமாக மாறியது

ஆனால் தற்போது சாலை பணிகளுக்காக இப்பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த எண்ணற்ற புளிய மரம், அரச மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன. இதன் காரணமாக சோலைவனமாக காட்சியளித்த இப்பகுதி தற்போது பாலைவனமாக மாறி `எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்' என்பது போல காட்சியளிக்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக சாலை பணி நடைபெறும் போதே சாலையோரத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால் இதுவரை இந்த நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை. இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனை தருவதாக அமைந்துள்ளது.

ஆக்சிஜன் கிடைப்பதில்லை

இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது:- இன்றைய அவசர உலகில் இயற்கை முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு வருவதால் மழை பெய்யும் நிலையும் குறைந்து வருகிறது. இதுதவிர வாகனங்களில் பெருக்கத்திற்கேற்ப போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை.

இந்த உலகத்தில் தங்களது எதிர்கால சந்ததியினருக்கு இன்றைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதை விட மரங்களை வளர்த்து நல்ல நிலையை ஏற்படுத்தினாலே போதும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

மரக்கன்றுகள் நடவேண்டும்

காரைக்குடி பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை. இதேபோல் திருச்சி-ராமேசுவரம் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட புதிய பைபாஸ் சாலையோரத்திலும் கூட இதுநாள் வரை புதிய மரக்கன்றுகள் நடப்படாமல் உள்ளது.

இனி வரும் காலத்தில் சாலை விரிவாக்க பணியின்போது சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்