கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி சாவு
சிவகிரி அருகே, கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி இறந்தார்
சிவகிரி:
சிவகிரி அருகே, கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி இறந்தார்.
சர்க்கரை ஆலை தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கோபாலபுரம் 3-வது சந்தை சேர்ந்த காளிமுத்து மகன் சிவானந்தம் (வயது 45). இவரும், அதே ஊர், அதே தெருவைச் சேர்ந்த உறவினர் சந்திரசேகர் மகன் பெரியதுரை (32) என்பவரும், கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடுமலைப்பேட்டையில் இருந்து தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரிக்கு வந்தனர்.
இங்கு ராயகிரியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கரும்பு ஆலையில் சர்க்கரை தயார் செய்யும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
கிணற்றில் விழுந்து பலி
நேற்று முன்தினம் கரும்பு ஆலையில் கூலி வேலைக்கு போதிய தொழிலாளர்கள் வரவில்லை. எனவே ஆட்களை அழைத்து வருவதற்காக பெரியதுரை ராயகிரிக்கு சென்றிருந்தார்.
அப்போது சிவானந்தம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அருகில் உள்ள கிணற்றின் மேல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரின் மேல் படுத்திருந்தார். திடீரென கிணற்றின் உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அதிர்ச்சி
ராயகிரிக்கு சென்று விட்டு பெரியதுரை கரும்பு ஆலைக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு சிவானந்தம் இல்லை. எனவே அவரை அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணாததால் கிணற்றின் உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கு சிவானந்தம் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் பெரியதுரை புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். சிவானந்தம் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன சிவானந்தத்திற்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.