மோட்டார் சைக்கிள் திருட முயன்ற வாலிபர்களை பிடித்த பொதுமக்கள்
ஆரல்வாய்மொழியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர்களை அழைத்துச் செல்ல போலீசார் வராததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர்களை அழைத்துச் செல்ல போலீசார் வராததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர் திருட்டு
ஆரல்வாய்மொழி பகுதியில் சமீப நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியில் பஞ்சாயத்து ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுபோல் கன்னி விநாயகர்கோவில் தெருவில் வீட்டு முன்பு நின்ற ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இவ்வாறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெருமாள்புரம் கன்னி விநாயகர்கோவில் தெருவில் பூ வியாபாரி வேலு என்பவர் வீட்டின் அருகில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து வேலு வெளியே வந்து பார்த்தார்.
மோட்டார் சைக்கிள் திருட முயற்சி
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், வேலுவின் மோட்டார் சைக்கிளை திருட முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, 'திருடன்... திருடன்...' என்று சத்தம் போட்டார். வேலுவை கண்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அதற்குள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், 2 பேரையும் அங்கிருந்த மின்கம்பங்களில் கட்டி வைத்துவிட்டு ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விடிய விடிய காவல் காத்தனர்
சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் வாலிபர்களின் மோட்டார் சைக்கிளையும், அவர்களது செல்போனையும் எடுத்து சென்றனர். ஆனால், வாலிபர்களை அழைத்துச் செல்லாமல் அங்கேயே விட்டு விட்டு சென்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் கேட்டதற்கு அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேருங்கள் என்று கூறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விடிய விடிய அங்கேயே நின்று அவர்கள் தப்பி விடாமல் காவல் காத்தனர்.
திடீர் சாலை மறியல்
பின்னர், விடிந்தவுடன் மீண்டும் போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் வரவில்லை. நேரம் செல்ல செல்ல அங்கு பொதுமக்கள் அதிகளவில் கூடத்தொடங்கினர்.
தொடர்ந்து திருடர்களை கையும் களவுமாக பிடித்து வைத்தும் போலீசார் அழைத்து செல்லாததை கண்டித்து காலை 7 மணியளவில் நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அந்த வழியாக வந்த சில வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குற்றவாளிகளை கொண்டு செல்லும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து போலீசார் 2 வாலிபர்களையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் ரத்னபுரத்தை சேர்ந்த மோகன்மணி மகன் ஜோசப் (வயது 20), தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த அசோக் மகன் ஆகாஷ் (21) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.