தந்தை, மகனுக்கு கத்திக் குத்து
ஆம்பூரில் தந்தை, மகனுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 40). இவரது மகன் ஜனா (வயது 17). நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்க அருகில் இருந்த கடைக்கு ஜனா சென்று, பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 28) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜனா தனது தந்தை ஜாவித்தை அழைத்து வந்ததாகவும், பிரதாப், உறவினரான அருண் (28), சுகன்யா (26) ஆகியோரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. பின்னர் பிரதாப், சுகன்யா, அருண் ஆகியோர் கத்தியால் ஜாவித், ஜனாவை குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இது குறித்து ஜாவித் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதாப், அருண் சுகன்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.