அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றிய தந்தை, மகன்: அரிதான பொருட்களை சேகரித்து அசத்தல்

2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.

Update: 2023-01-06 02:59 GMT

திண்டுக்கல்,

கொடைக்கானலில் 3 தலைமுறைகளாக பழமையான பொருட்களை சேகரித்தும் 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து கொடைக்கானலை சேர்ந்த ஜோஸ்வா, அவரது மகன் கேலப் ஆகியோர் அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.

பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளிட்ட பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான மனிதர்கள் அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை பார்க்க முடிகிறது.இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 3 தலைமுறைகளாக அரிதான மற்றும் பழமையான பொருட்களை சேகரித்து வருகின்றனர். தனது தாத்தா காலத்தில் ஆரம்பித்து அவரது மகன் 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து தற்போது 3-ம் தலைமுறையாக இருக்கக்கூடிய 3 வயது சிறுவன் உட்பட இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.

குறிப்பாக இவர்கள் வீட்டையே அருங்காட்சியகம் போல் பழமையான பொருட்களை வைத்து நிரப்பி உள்ளனர். எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பு நீண்டு வருகிறது. பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.

இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய 2000 வகைகளுக்கும் மேலாக உள்ள பறவைகளின் இறகுகளும் உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும் பழங்காலத்தில் கணக்கு எழுதிய ஓலைச்சுவடிகள் உலகில் அழிந்து போன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு முந்தைய கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் வரை இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.

தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் புத்தகங்கள், பழைய பொருட்களோடு நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த சேகரிப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர். ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது.

எனவே பழமையான பொருட்களை பாதுகாக்கும் இவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்