திருவெண்ணெய்நல்லூர் அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் காலனியை சேர்ந்தவர் சுப்ராயன் மகன் கிருஷ்ணசாமி (வயது 31) இவர் இதே ஊரை சேர்ந்த முருகன் மகள் அனிதா (26) என்பவரை காதலித்து கடந்த ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கிருஷ்ணசாமி சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து அனிதாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இது பற்றி அனிதா தனது தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகன் தனது மகன் முத்துகுமாருடன் சேர்ந்து கிருஷ்ணசாமியிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி தான் வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் முத்துகுமாரை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணசாமி மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.